Photos - Sri Gomatam Sampathkumarachar swami
திருவல்லிக்கேணியில், கடந்த 5 மாதங்களாக, ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாசார்ய உபய வேதாந்தாசாரியராய் எழுந்தருளியிருக்கும் கோயில் கோமடம் ஸ்ரீ சம்பத்குமாராசாரியார் ஸ்வாமி ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ர உபன்யாசம் சாத்தித்து வருகிறார்.
இந்த ஸ்ரீவசன பூஷணத்தின் செம்மையை ஸ்ரீ வைஷ்ணவத்தின் இருகண்களெனத் திகழும் ஸ்வாமி மணவாள மாமுனிகளும், ஸ்வாமி வேதாந்தாசாரியரும் பின் வருமாறு சாதிக்கின்றனர்
ஸ்வாமி மாமுனிகள் உபதேச ரத்னமாலையில்
சீர்வசன பூடணத்தின் செம்பொருளை சிந்தைதன்னால்
தேரிலுமாம் வாய்கொண்டு செப்பிலுமாம் – ஆரியர்காள்
என்தனக்கு நாளும் இனிதாக நின்றது! ஐயோ உந்தமக்கு எவ்வின்பம் உளதாம்
என்கிறார். அர்த்த விவரணம் தேவையே இல்லாதபடிக்கு எளிதாக விளக்கியிருக்கிறார். இந்த க்ரந்தத்தைப் பழிப்பவர்களை நோக்கி ” உந்தமக்கு (வேறு) எவ்வின்பம் உளதாம்” என்றும் கேட்கிறார்.
அவ்வின்பம் மாறாமல் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாதித்த வ்யாக்யானத்தைக் கொண்டு கோமடம் ஸ்வாமியும், அவ்வின்பத்தை நாமும் அனுபவிக்கும் வண்ணம் சாதித்தருளினார். அன்னாருக்குத் தலையல்லால் கைம்மாறிலோம் நாம்.
ஸ்வாமி வேதாந்தாசாரியரும், தமது “லோகாசார்ய பஞ்சாசத்” என்கிற க்ரந்தத்தில் இந்த ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை பின் வருமாறு கொண்டாடுகிறார்.
रूपं पुराणमणिभि: श्रुतिवज्रदीप्तं पद्माप्ते
र्मुनिजनस्तदलंचकार । तत्र त्वया विरचितं तु
मणिप्रवाळ वाग्भुषणं हि नितरां भुवनार्य भाति।।
ரூபம் புராணமணிபி: ச்ருதிவஜ்ரதீப்தம் பத்மாப்தேர் முநிஜநஸ் ததலஞ்சகார|
தத்ர த்வயா விரசிதம்து மணிப்ரவாள-
வாக்பூஷணம் ஹி நிதராம் புவநார்ய பாதி||
அதாவது, லோகாசர்யரே! ஸ்ரீய: பதியான எம்பெருமானுடைய, வேதமென்னும் வைரரத்னத்தினால் விளங்குகிற ப்ரஸித்தமான திருமேனியை, பராசர வ்யாஸாதி முநிவர்கள் விஷ்ணு புராணம், மஹாபாரதம் முதலிய புராணங்களென்னும் மணிகளாலே அலங்கரித்தனர். அத்திருமேனியில், தேவரீரால் இயற்றப்பட்ட ஸம்ஸ்க்ருதபாஷையும் தமிழ்மொழியாகிற மணிமயமாயும் பவழமயமாயுமுள்ள ஸ்ரீவசனபூஷணமென்னும் உயர்ந்த க்ரந்தமோவென்னில், மிகவும் ப்ரகாசிக்கின்றதல்லவா? என்று ஸ்ரீவசன பூஷணத்தின் சீர்மையை தெளிவிக்கிறார்.
இன்று (13-12-2017) இவ்வுபந்யாசத்தின் சாற்றுமறை வைபவமானது,
“அடியோங்கு நூற்றுவர் வீய, அன்று ஐவர்க்கு அருள் செய்த நெடியோனான” ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி அனுக்ரஹத்தாலும்,
“எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்ற, அங்கு அப்பொழுதே தோன்றிய” ஸ்ரீ தெள்ளியசிங்க பெருமாள் அனுக்ரஹத்தாலும்,
“கோல மாமணி ஆரமும் முத்துத் தாமும் முடிவில்லதோர் எழில் நீலமேனியனாய்” நம்மை நிறை கொண்ட ஸ்ரீ வேதவல்லீ நாயிகா சமேத ஸ்ரீமந்நாத ஸ்வாமி அநுக்ரஹத்தாலும்,
“தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்ற சரணாகத வத்ஸலனான ஸ்ரீ ராமபிரான் அனுக்ரஹத்தாலும்
‘ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானான” ஸ்ரீ கஜேந்திர வரதராஜ ஸ்வாமி அனுக்ரஹத்தாலும்
இனிதாக நிறைவேறியது.
Thanks to Sri Jilla